25th செப் 2025
ஆயுர்வேத மருத்துவத்தை ஒருங்கிணைத்து நாட்டில் சுகாதார செயல்முறையை கட்டிஎழுப்ப ஒரு சிறப்பான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
உலக ஆயுர்வேத தினம் நேற்று (23) அனுசரிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்பு பீட கேட்போர் கூடத்தில் நேற்று காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில், இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜாவின் பங்கேற்புடன் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 10வது உலக ஆயுர்வேத தின கொண்டாட்டத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம், ஆயுர்வேதத் திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம், சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம், கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடம் மற்றும் கம்பஹாவில் உள்ள விக்கிரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, ஆயுர்வேதம் உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும் என்றார். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக் கண்டத்தில் தோன்றியது என்றும், காலப்போக்கில், இது இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியது, மேலும் ஆயுர்வேத மருத்துவம் மேலும் வளர்ச்சியடைந்து மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் ஆயுர்வேதம் நாட்டின் சுதேச மருத்துவத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அத்துடன் 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் எண் ஆயுர்வேதச் சட்டம், இந்த அமைப்பின் வளர்ச்சி மற்றும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார். தற்போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஆயுர்வேத மருத்துவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கக் கொள்கைகளுக்கு இணங்க, ஆயுர்வேத சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துதல், சிறந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாட்டின் எதிர்காலத்திற்காக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை (UHC) அடைவதற்கும் ஆயுர்வேதத்தை ஒருங்கிணைப்பது சுகாதார அமைச்சின் சிறந்த நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். ஆயுர்வேதத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இலங்கையும் இந்தியாவும் கைகோர்த்துச் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக முதுகலை உதவித்தொகைகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்திய அரசின் ஆதரவைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், அண்டை நாடுகளாகவும் இந்தியாவுடனான நமது உறவுகளை வலுப்படுத்துவோம் என்றும், ஆயுர்வேதம் மூலம் உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்த அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற ஊக்குவிப்போம் என்றும் அமைச்சர் இங்கு தனது கருத்துக்களைத் தெரிவித்தார். ஆயுர்வேத மருத்துவத்தின் தரம், செயல்திறனை வலுப்படுத்துதல் மற்றும் ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைப்பது எனபது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக கருதப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜாவும் விழாவில் உரையாற்றினார், மேலும் சிறப்புரையை பேராசிரியர் ஆர்.எஸ். ஜெயவர்தன வழங்கினார். ஆயுர்வேதம் என்றால் நீண்ட ஆயுளை வாழ உதவும் உயர்ந்த போதனைகளின் தொகுப்பாகும். உலக ஆயுர்வேத தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த உலகளாவிய நிகழ்வானது, ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியத்தின் புனித தெய்வமான தன்வந்திரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் நோக்கமானது ஆயுர்வேதத்தின் கொள்கைகள் மற்றும் நோய்களைத் தடுப்பதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் அதன் ஆற்றல் குறித்து உலகளாவிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த நிகழ்வில் ஆயுர்வேத ஆணையர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கூடுதல் செயலாளர் சாமந்தி ரணசிங்க, கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் ஷம்மி ஹடவத்தே, கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இந்திக கருணாதிலக்க, கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பதிரகே கமல் பெரேரா, பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையின் டாக்டர் பராக்கிரம ஹேமச்சந்திர மற்றும் கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கே.பி.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.